ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இந்தியா இடம்பெற பின்லாந்து ஆதரவு

1 mins read
f44b90c3-b235-456d-9ca0-edf80a2082ba
 பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப். - படம்: ஊடகம்

ஹெல்சிங்கி: அனைத்துலக அரசியல் அரங்கில் தவிர்க்க இயலாத சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்தார்.

எனவே, வருங்காலத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இணையாக உலகின் அடுத்த வல்லரசாக இந்தியா உருவாகும் என்று அவர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆங்கிலச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், உலகளாவிய நெருக்கடிகள் தொடர்பாக முடிவெடுக்கும் முக்கியமானதோர் இடத்தில் இந்தியா உள்ளதாகக் குறிப்பிட்டார்.

தாம் இந்தியாவின் ஆகப்பெரிய ரசிகர் என்றும் அந்நாட்டின் அனைத்து நடவடிக்கையும் மரியாதையும் வரவேற்பையும் பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஐநா பாதுகாப்பு மன்றத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா விடுத்து வரும் வேண்டுகோளுக்கு அதிபர் அலெக்சாண்டர் ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா போன்ற ஒரு நாடு பாதுகாப்பு மன்றத்தில் இடம்பெறாமல் இருப்பது பெரும் தவறு என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா போன்ற நாடுகள் தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை எனக் கருதும் பட்சத்தில் ஐநா போன்ற அமைப்புக்குத்தான் சிக்கல் ஏற்படும் என்றும் ரஷ்யா, உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா முக்கியப் பங்காற்ற முடியும் என்றும் அதிபர் அலெக்சாண்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா ஆகியோர் ரஷ்யா, உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் பின்லாந்து அதிபர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்