ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு

2 mins read
6e1ca8a2-d401-43ab-9686-bc147eb55332
அமித்‌ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி. - படம்: பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் / இணையம்

புதுடெல்லி: இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீது டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) நிகழ்ந்த அமளியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியனர், ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் (பாஜக) இரு தரப்பும் ஒன்றை மற்றொன்றைத் தாக்கிப் பேசியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியது, சட்டவிரோதமான முறையில் பலவந்தமாக நடந்துகொண்டது, சட்டவிரோதமான முறையில் அச்சுறுத்துவது உள்ளிட்டவற்றுக்கான சட்டப் பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செயய்ப்பட்டது என்று மூத்த டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேர்ந்த களேபரத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் காயமுற்றதையடுத்து அக்கட்சி திரு ராகுல் காந்தி மீது புகார் அளித்ததாக என்டிடிவி போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டன. அதனைத் தொடர்ந்து திரு காந்தி மீது காவல்துறை வழக்குப் பதுவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமுற்றதற்கு திரு காந்திதான் பொறுப்பு என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. அவர் மீது முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாஜகவின் அனுராக் தாக்கூர் மற்றும் பன்சூரி ஸ்வராஜ், ஹேமங் ஜோ‌ஷி ஆகியோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

திரு காந்தி கொலை முயற்சியில் ஈடுபட்டார் போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்‌ ஷா, திரு அம்பேத்கரைப் பற்றி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துகளுக்கு திரு காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்