காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி காவல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 முதல் 20 வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.
காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு வழக்குகளின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சனிக்கிழமை நள்ளிரவு எதிர்பாராத விதமாக அங்கு தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாகத் தீ மளமளவெனப் பரவி, வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்தது.
இந்தத் தகவல் அறிந்ததும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்களும், காவல் துறையினரும் சுமார் ஒரு மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் வாகனங்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீயை அணைக்கும் பணியில் கூடுதல் காவல் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
“தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்துத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்; விரைவில் உண்மை நிலவரம் தெரியவரும்,” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

