கோவா: பிரபலமான இரவு கேளிக்கைக் கூடம் ஒன்று தீப்பற்றியதில் 25 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பர்ச் என்ற அந்த விடுதியின் சமையலறையில் எரிவாயுக் கலன் வெடித்ததாகக் காவல்துறையினர் தொடக்கத்தில் நினைத்திருந்தனர்.
ஆனால் அது தீச்சம்பவத்திற்குக் காரணம் இல்லை என தெரிவித்த கோவாவின் முதல்வர் பிரமோத் சாவந்த், விடுதிக் கட்டடத்திற்குள்ளேயே வெடிக்கப்பட்ட வாணவேடிக்கைதான் இதற்குக் காரணம் என்றார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் 21 பணியாளர்களும் தீயில் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
இரவு விடுதியின் நிர்வாகி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதியின் உரிமையாளருக்கு எதிரான கைதாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அரபுக் கடலின் கரையோரத்திலுள்ள கோவா, முன்னதாக பேர்ச்சுகீசிய காலனியாக இருந்தது. அம்மாநிலத்தின் கடற்கரைகளையும் இரவுநேர கேளிக்கைகளையும் நாடி மில்லியன் கணக்கான சுற்றுப்பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர்.
தீச்சம்பவத்திற்கான காரணம் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதல்வர் சாவந்த், அதன் தொடர்பான அறிக்கை அடுத்த ஆண்டு வெளிவரும் எனக் கூறினார்.
தீச்சம்பவத்திற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்று முனைவர் சாவந்த் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கோவா தீ விபத்து ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

