ராஜ்கோட்: இந்தியாவின் குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்தனர்; ஒருவர் காயமுற்றார்.
மற்ற அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ராஜ்கோட் நகரக் காவல்துறைத் துணை ஆணையர் ஜெகதீஷ் பங்கார்வா கூறினார்.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும் அவர் சொன்னார்.
அட்லாண்டிஸ் எனும் அந்தக் கட்டடத்தின் ஆறாவது மாடியில் காலை 10 மணியளவில் பற்றிய தீ, விரைவில் ஐந்தாவது மாடிக்கும் பரவியதால் குடியிருப்பாளர்கள் பீதியடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியைத் தொடங்கினர்.
அவசர மருத்துவ வாகனங்களும் அங்கு தயார்நிலையில் நிறுத்தப்பட்டன.
நீரழுத்த மின்தூக்கிகளின் துணையுடன் தீயணைப்பாளர்கள் மேல்மாடிகளில் இருந்த குடியிருப்பாளர்களை மீட்டனர். கிட்டத்தட்ட 50 பேர் மீட்கப்பட்டதாக இந்தியா டுடே செய்தி குறிப்பிட்டது.
மீட்பு நடவடிக்கைகளின்போது தீயணைப்பாளர் இருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஆறாவது தளத்தில் இடம்பெற்ற புதுப்பிப்புப் பணிகளின்போது ஏற்பட்ட மின்கசிவே அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பலராலும் அறியப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள், மருத்துவர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் பலர் அட்லாண்டிஸ் குடியிருப்பில் வசித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.