புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் பங்களா வீட்டி தீ முண்டது; அதனைத் தொடர்ந்து அவ்வீட்டிலிருந்து பெரிய பணக் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இந்திய நீதித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நீதிபதியை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் தலைமையிலான உச்ச நீதிமன்றக் குழு வேறு உயர் நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்தது.
தீ மூண்டபோது உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உள்ளூரில் இல்லை. அவரின் குடும்பத்தார், தீயணைப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீ அணைக்கப்பட்ட பிறகு தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் வீட்டின் ஓர் அறையில் அதிக ரொக்கம் இருப்பதைக் கண்டனர். அந்தப் பணம், அதிகாரபூர்வ கணக்கில் இடம்பெறாத தொகை என்று நம்பப்படுகிறது.
பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து உள்ளூர் காவல்துறையினர், தங்களின் முத்த அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினர். பிறகு இத்தகவல் அரசாங்கத்தைச் சென்றடைந்தது. அரசாங்கம் அதைப் பற்றி தலைமை நீதிபதியிடம் தெரிவித்தது.
தலைமை நீதிபதி உடனடியாக உச்ச நீதிமன்றக் குழுவுடன் சந்திப்பு நடத்தினார். நீதிபதி வர்மா உடனடியாக இடம் மாற்றம் செய்யப்படவேண்டும் என்பது குழுவினர் பலரின் கருத்தாக இருந்தது.
நீதிபதி வர்மா, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடம் மாற்றப்பட்டார். அந்த நீதிமன்றத்திலிருந்துதான் அவர் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், இவ்வளவு பெரிய தொகையைக் கண்டுபிடித்த பிறகு பிறகு அவரை இடம் மாற்றம் செய்வது என்பது போதாது; அது, நீதித் துறையின் பெயரைப் பாதிக்கும் நடவடிக்கையாகும் என்று ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உச்ச நீதிமன்றக் குழுவைச் சேர்ந்தவர்களில் சிலர் சிலர் கவலை தெரிவித்தனர். நீதிபதி வர்மா, பதவி விலகவேண்டும் என்றும் அவர் அவ்வாறு செய்யாவிட்டால் தலைமை நீதிபதியின் வழிநடத்தலில் தங்களுக்குள்ளேயே விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கருத்துரைத்தனர்.
அதுவே நாடாளுமன்றம் நீதிபதி வர்மாவைப் பொறுப்பிலிருந்து விலக்குவதற்கான முதற்கட்டமாக அமையும் என்பது அவர்களின் வாதம்.

