ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ மூண்டதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் பெண்கள் மூவரும் அடங்குவர்.
சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையின் ட்ராமா சென்டர் எனப்படும் மோசமான பாதிப்பு அல்லது காயங்களுக்கு ஆளாகி மீண்டு வருவோருக்கு சிகிச்சையளிக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) மோசமான தீ மூண்டது.
உள்ளூர் நேரப்படி இரவு 11.20 மணியளவில் தீ முண்டது. மின்சாரக் கோளாற்றால் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 13 பேர் அருகிலிருந்த நோயாளிகள் தங்குமிடத்தில் இருந்தனர்.
தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது நோயாளிகள் தங்குமிடம் முழுவதையும் புகை சூழ்ந்திருந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது. அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவது சிரமமாக இருந்ததென அவர் குறிப்பிட்டார்.
“கட்டடத்தின் எதிர் பக்கத்தில் இருந்து சன்னல் கண்ணாடிகளை உடைத்து தண்ணீரைப் பீய்ச்சியடிக்க வேண்டியிருந்தது,” என்றார் அவர். தீயை அணைக்க கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆனதாக அவர் குறிப்பிட்டார்.
நோயாளிகள் அவரவர் படுக்கைகளுடன் வெளியேற்றப்பட்டு சாலையோரத்திற்கு மாற்றப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவம் குறித்து மாநில அரசாங்கம் உயர்நிலை விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கேலோட் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
காயமுற்றோருக்குத் தகுந்த சிகிச்சை வழங்கப்படும் என்று அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியளித்துள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்த ராஜஸ்தான் அரசாங்கம் அறுவரைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது.