கோல்கத்தா: மேற்கு வங்கம், பிர்பூம் மாவட்டத்திலுள்ள விடுதி ஒன்றில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) ஏற்பட்ட தீ விபத்தில் எழுவர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விடுதியின் உரிமையாளர் கல்யாண் பாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயில் நகரமான தாராபித்தில் உள்ள நான்கு மாடி விடுதியின் தரைத்தளத்தில், பெரும்பாலான விருந்தினர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது, அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சிலர், புகழ்பெற்ற காளி கோயிலில் வழிபாடு செய்வதற்காக அந்த நகருக்கு வந்திருந்த பக்தர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுதியின் பின்புற அவசரகால வெளியேறும் கதவு பூட்டப்பட்டிருந்ததாகத் தங்கிருந்த பயணிகள் கூறியுள்ளனர்.
ஆனால், பயத்தினாலும் பதற்றத்தாலும் பயணிகள் பின்புறக் கதவைக் கவனிக்காமல் முன்வாயில் வழியாகத் தப்ப முயன்றதே காயம் அடையக் காரணம் என விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அடர்ந்த புகை ஐந்தாவது மாடிவரை பரவிய போதிலும், தீ முதல் இரண்டு மாடிகளோடு கட்டுப்படுத்தப்பட்டதால் கூடுதல் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
தீயணைப்புப் படையினர் 22 பேரை மீட்டுள்ளனர். காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
படிக்கட்டுகளின் சன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் புகை வெளியேற முடியாமல் அங்கிருந்தோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாகப் பிர்பூம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விதித் ராஜ் பூண்டேஷ் தெரிவித்தார்.
“திடீரென்று விடுதி முழுவதும் புகை சூழ்ந்துகொண்டது. எங்களால் சுவாசிக்க முடியவில்லை, வெளியேறுவதற்கான வழியைக் கண்டறிவதும் கடினமாக இருந்தது,” என்று தீ விபத்திலிருந்து தப்பிய கோல்கத்தாவைச் சேர்ந்த பெண் கூறினார்.
இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் துருபா சாகா, தாராபித் ராம்பூர்ஹாட் வளர்ச்சி வாரியத்தைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வளவு பெரிய கட்டடத்தில் போதிய தீயணைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்றும், தற்போதைய கட்டமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.


