அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ; பல வீடுகள் சேதம்

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ; பல வீடுகள் சேதம்

1 mins read
97fbaca4-8941-4da7-a939-20685a16c478
ஒன்பதாம் மாடியில் பற்றிய தீ 12ஆம் மாடிவரைக்கும் பரவியதாகக் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார். - படம்: ஏஎன்ஐ
multi-img1 of 2
Google News Preferred Icon

காஸியாபாத்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் புதன்கிழமை (ஏப்ரல் 29) காலை ஏற்பட்ட தீ பல தளங்களிலுள்ள வீடுகளுக்குப் பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மக்கள் நெருக்கம் மிக்க அந்தப் பகுதியில் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர்.

தீ விபத்தில் உயிருடற்சேதம் நேர்ந்ததா என்பது குறித்து எதுவும் உறுதிசெய்யப்படவில்லை.

தீ மிக வேகமாக மேல்நோக்கிப் பரவியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

“தீ ஒன்பதாவது மாடியிலிருந்து 13வது மாடிவரை பரவி, பின்னர் கட்டடத்தின் உச்சிவரை எட்டிவிட்டது. காலை 8.30 மணியளவில் தீப்பிடித்தது,” என்று மீரா எனும் குடியிருப்பாளர் கூறினார்.

ஒன்பதாம் மாடியில் வண்ணம் பூசும் பணி நடந்துகொண்டிருந்தது என்றும் அப்போது மின்கசிவு ஏற்பட்டு, குளிரூட்டி வெடித்திருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

இவ்விபத்தால் கட்டடத்திற்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் 10 முதல் 12 வீடுகள்வரை கடுமையாகச் சேதமடைந்துள்ளன என்றும் ரோகித் எனும் குடியிருப்பாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலுள்ள மீட்புப் பணியாளர்கள் தீயை முழுமையாகக் குளிர்விக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், குடியிருப்பாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா என்பதையும் அவர்கள் உறுதிசெய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்