தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளக் கோயிலில் பட்டாசு விபத்து: 150க்கும் அதிகமானோர் காயம்

2 mins read
f6271957-e32a-49ad-bcea-45d1893173ce
கட்டுக்கடங்காத பட்டாசு வெடிப்புகளையும் கொழுந்துவிட்டு எரியும் தீயையும் காட்டும் காணொளிகள் இணையத்தில் வலம் வந்தன. - படம்: கேரள ஊடகம்

காசர்கோடு: கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் இந்திய நேரப்படி அக்டோபர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது.

இதில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காத பட்டாசு வெடிப்புகளையும் கொழுந்துவிட்டு எரியும் தீயையும் காட்டும் காணொளிகள் இணையத்தில் வலம் வந்தன.

கரும்புகை சூழ்ந்திருக்க, பக்தர்கள் பதறியடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடியதைக் காணொளிப் பதிவுகளில் காண முடிந்தது.

கேரளாவில் கொண்டாடப்படும் தெய்யம் விழாவின் தொடக்கமாக அஞ்சுதாம்புலம் வீரக்காவு அனுசரிக்கப்படுகிறது.

அந்தச் சடங்கின்போது இப்பட்டாசு விபத்து நிகழ்ந்ததாகக் கேரள ஊடகங்கள் தெரிவித்தன.

நள்ளிரவு நேரத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும் அப்போது பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் தீ மூட்டப்பட்ட பட்டாசு தவறுதலாக விழுந்திருக்கக்கூடும் என்றும் சம்பவத்தை நேரில் கண்டோர் கூறினர்.

அந்தக் கொட்டகைக்கு அருகில் பலர் நின்றுகொண்டிருந்ததாகவும் கூட்ட நெரிசலாக இருந்ததால் அவர்களால் அங்கிருந்து விரைவாகத் தப்பிச் செல்ல முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் காயமடைந்தவர்களில் 97 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை காசர்கோடு மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் உறுதி செய்துள்ளார். அதில் 8 பேருக்கு 80 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் பட்டாசு வெடிக்கும் பகுதிக்கும், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கும் இரண்டு அல்லது மூன்று அடி மட்டுமே இடைவெளி இருந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தை அடுத்து கோயில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்