தீபாவளிக்குப் பட்டாசு விலை 20% வரை உயரக்கூடும்: தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

தீபாவளிக்குப் பட்டாசு விலை 20% வரை உயரக்கூடும்: தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

கோப்புப்படம்: டெக்கன் ஹெரால்ட்

28 Sep 2026 - 4:55 pm

2 mins read

இந்த ஆண்டுத் தீபாவளிக்குப் பட்டாசு விலை 15 முதல் 20 விழுக்காடு வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பட்டாசு தலைநகரம் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு உற்பத்திச் செலவு 30 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதால், அவற்றின் விற்பனை விலை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மூலப்பொருள்களின் விலை, போக்குவரத்துச் செலவு ஆகியவை அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு விதிமீறல்கள் காரணமாகப் பட்டாசு ஆலைகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்ததால் உற்பத்தித் திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தரமான பட்டாசுகளைத் தயாரிக்கத் தேவையான பெரும்பாலான மூலப்பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன எனத் தமிழ்நாடு வாணவேடிக்கை, வெடிமருந்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் பஞ்சுராஜன் தெரிவித்தார்.

மேலும், “உலக அரசியல் பதற்றங்கள் காரணமாக மூலப்பொருள்களின் விலை 17 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பொருள்கள் கிடைத்தாலும், அவை ஆலைகளை வந்தடைய நீண்ட காலம் ஆகிறது,” என அவர் சுட்டினார்.

பட்டாசு தயாரிப்பில் மிகவும் அவசியமான பொருளாக இருக்கும் கந்தகத்தின் (Sulphur) விலை கிட்டத்தட்ட 250 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை உயர்வால் உள்நாட்டு மூலப்பொருள்களின் கொள்முதல் செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகச் சிறிய அளவிலான பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

மேலும்,பாதுகாப்பு விதிமீறல்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட உரிமங்களைத் திரும்பபெற சில மாதங்கள் ஆவதால், இதுவரை 60 விழுக்காடு உற்பத்தி மட்டுமே நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

மொத்த விற்பனை விலை குறைந்தது 25 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், சிறிய ரகப் பட்டாசு வகைகளைக் கூட விநியோகம் செய்ய ஆலைகள் திணறி வருவதாகவும் வியாபாரிகளும் கடை உரிமையாளர்களும் கூறினர்.

விலை உயர்வு காரணமாக இம்முறை வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்குவதைக் குறைக்கக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்