புதுடெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து, மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், 100 விழுக்காடு எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசூகி நிறுவனங்கள் அறிமுகம் செய்யவுள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரும் ஜூன் 3ஆம் தேதி, இந்தியாவின் முதலாவது 100 விழுக்காடு எத்தனால் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்துகிறது.
தற்போது சந்தையிலுள்ள மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் 85 விழுக்காடு எத்தனால் கலவையில் இயங்குகின்றன.
இந்நிலையில், முழுமையாக எத்தனாலை மட்டுமே பயன்படுத்தும் முதல் இருசக்கர வாகனங்கள் சந்தைக்கு வரவுள்ளன.
இந்தத் தொடக்கநிலை வாகனம், ‘எச்.எப். டீலக்ஸ்’ வகையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது அதேபோல, மாருதி சுசூகி நிறுவனம் உலகச் சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி , 100 விழுக்காடு எத்தனால் எரிபொருளில் இயங்கும் முதல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
அதன் வாயிலாகக் கார் சந்தையிலும் எத்தனால் எரிபொருள் பயன்பாடு ஒரு புதிய திருப்புமுனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 100 விழுக்காடு எத்தனால் கார், ‘வேகன்ஆர்’ அல்லது ‘ப்ரான்க்ஸ்’ வகையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ‘இ-20’ எனப்படும் 20 விழுக்காடு எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால், இந்தப் புதிய வாகனங்கள் ‘இ-100’ எனப்படும் முழுமையான எத்தனால் எரிபொருளில் இயங்கும் வகையில் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாய விளைபொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த உயிரி எரிபொருள் பயன்பாட்டின் மூலம், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் சார்பு குறையும்.
அத்துடன், கரிம வெளியேற்றம், சுற்றுப்புறத் தூய்மைக்கேடு ஆகியவை பெருமளவில் தடுக்கப்பட்டு, நீடித்த நிலைத்தன்மையுடைய சுற்றுச்சூழல் மேம்பாடு இதனால் சாத்தியமாகும் எனப் பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

