புதுடெல்லி: இந்திய ரயில்வே ஆணையம் முதன்முறையாக குறிப்பிட்ட நேரத்துக்குள் பயணத்தை முடிக்கும் சரக்கு ரயில் சேவையை வழங்குகிறது.
இந்த ரயில் சேவை புதன்கிழமை (அக்டோபர் 1) டெல்லியின் துக்ளகபாத்துக்கும் கோல்கத்தாவின் ஷாலிமார் பகுதிகளுக்கும் இடையே சேவை வழங்குகிறது. ஆக்ரா, கான்பூர் ஆகியவற்றின்வழி சேவை வழங்கப்படுகிறது.
இந்த சரக்கு ரயில் சேவை சரியாக 120 மணிநேரத்துக்குள் வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தது. இந்நிகழ்வு, தளவாடத் துறையில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் சேவையை ‘கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ (கொன்கோர்) வழங்குகிறது.
அறிமுகத் திட்டமான இச்சேவை முதலில் வாரந்தோறும் இருமுறைகளாக புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் வழங்கப்படும்.
“குறிப்பிட்ட நேரத்துக்குள் செயல்படும் இந்த சரக்கு ரயில் சேவையின் மூலம் நேரத்துக்கு சரக்குகளைச் சம்பந்தப்பட்டோரிடம் ஒப்படைக்கலாம். எனவே, இது தளவாடத் துறையில் ஒரு மைல்கல்லாக விளங்கும்,” என்று ரயில்வே துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்தது.
மேலும், சாலைவழி சேவைகளை வழங்குவதற்குப் பதிலாக ரயிலில் வழங்குவதன் மூலம் இத்திட்டம் இந்தியாவின் பசுமை இலக்குகளுக்கு இணங்க அமைந்துள்ளது என்று ரயில்வே அமைச்சு கூறியது.