தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர்ச் சூழலிலும் வேலைக்காக இஸ்ரேல் செல்லும் இந்தியர்கள்

2 mins read
பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா வலியுறுத்து
dfbdc14b-db54-4377-93e0-a4c68634539b
கட்டுமானப் பணிகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) இஸ்ரேலுக்குக் கிளம்பிய 60 இந்தியர்கள். - படம்: நவோர் கிலான் / எக்ஸ்

புதுடெல்லி: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடந்து வந்தாலும் இந்தியர்கள் பலர் வேலைக்காக இஸ்ரேல் செல்கின்றனர்.

முதற்கட்டமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) இந்தியக் கட்டுமான ஊழியர்கள் 60 பேர் இஸ்ரேலுக்குப் புறப்பட்டதாக இந்தியாவிற்கான இஸ்ரேலியத் தூதர் நவோ கிலான் தெரிவித்தார்.

“இந்திய ஊழியர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து இந்தியா - இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே அந்த 60 பேரும் இஸ்ரேல் சென்றனர்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

“இந்த உடன்பாடு போருக்கு முன்பே கையெழுத்தானது. அவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்திய ஊழியர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருக்கிறோம்,” என்று திரு ஜெய்ஸ்வால் சொன்னார்.

இப்போதைக்குக் கிட்டத்தட்ட 18,000 இந்தியர்கள் பராமரிப்பு ஊழியர்களாக இஸ்ரேலில் பணியாற்றி வருகின்றனர் என்றும் அங்குள்ள இந்தியத் தூதரகம் அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

இருநாட்டு உடன்பாட்டின் அடிப்படையிலும் இந்தியாவின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத் திட்டத்தின்கீழும் இந்திய ஊழியர்கள் இஸ்ரேலுக்குச் செல்வதாகத் திரு கிலோன் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போரைத் தொடர்ந்து, 90,000 பாலஸ்தீனர்களுக்குப் பதிலாக 100,000 இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுப்பது குறித்து இஸ்ரேலியக் கட்டுமானத் துறை ஆராய்ந்து வருவதாக ஊடகச் செய்திகள் வெளியாயின.

அவ்வகையில், இவ்வாண்டு ஜனவரி 16ஆம் தேதி அரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றன என்றும் அவற்றின்மூலம் 9,727 பேர் தேர்வுசெய்யப்பட்டனர் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

இம்மாதம் மட்டும் 1,500 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவர் என்றும் அச்செய்தி கூறியது.

சென்ற மாதம் இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் மாண்டுபோனார். அத்தாக்குதலை ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் கவனம் செலுத்தி வருவதாக இந்தியா தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்