புதுடெல்லி: இந்திய அரசாங்கம் விவசாயிகள் நலனை மேம்படுத்தக் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் 2025ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் அவர்களின் வளப்பத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதன்கிழமை (ஜனவரி 1) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ‘பிரதமரின் ஃபஸல் பீமா யோஜனா’ திட்டத்தையும் மறுவடிவமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையும் தொடர முடிவெடுக்கப்பட்டது.
வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள சகோதர, சகோதரிகள் நாட்டு மக்களுக்கு உணவளிக்கக் கடுமையாக உழைக்கின்றனர் என்று கூறிய திரு மோடி, முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘டை அமோனியம் பாஸ்பேட்’ உரத்துக்கான ஒருமுறை மட்டும் வழங்கப்படும் சிறப்புத் தொகையை மேலும் நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வெளியாகும் வரை இது நடப்பில் இருக்கும்.
விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலையில் உரம் கிடைப்பதை உறுதிசெய்யும் இந்த நடவடிக்கைக்கு ரூ.3,850 வரையிலான நிதி தேவைப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2025-26ஆம் ஆண்டு வரை ‘பிரதமரின் ஃபஸல் பீமா யோஜனா’ திட்டத்தையும் மறுவடிவமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையும் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2021-22 முதல் நடப்பில் உள்ள இத்திட்டங்களுக்கு மொத்தம் ரூ.69,515 கோடி செலவாகும் என்று கூறப்பட்டது.
மத்திய அமைச்சரவையின் முடிவு, தடுக்க இயலாத இயற்கைப் பேரிடர்களால் பயிர்கள் அழிய நேரிட்டால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்குத் தொடர கைகொடுத்துள்ளது.
புத்தாக்க, தொழில்நுட்ப நிதி எனும் புதிய நிதியை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த நிதி, விளைச்சல் மதிப்பீடு தொடர்பிலான தொழில்நுட்ப முயற்சிகளுக்கும் ஆய்வு, மேம்பாட்டுக் கல்விக்கும் பயன்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய அமைச்சரவையின் முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் புகழ்ந்துரைத்தார்.
இது, விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் முடிவு என்று உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டினார். கட்டுப்படியான விலையில் உரம் தொடர்ந்து கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்பதால் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் என்றார் அவர்.