சென்னை: சென்னை பூந்தமல்லியில் ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு ரயிலிலும் மூன்று பெட்டிகள் இருக்கும். இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது.
இந்த வகையைச் சேர்ந்த முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த நிலையில் ரயில்கள் சோதனைகளுக்கு தயார் செய்யப்பட்டன. அங்கு பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இந்த ரயில் சென்னைக்கு அக்டோபரில் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் கடந்த மாதம் 3வது வாரத்தில் சென்னையை வந்தடைந்தது.
இந்த ரயிலின் முதல் சோதனை ஓட்டம் பூந்தமல்லியில் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது குறித்து விளக்கமளித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், “ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட்ட பிறகு, அல்ஸ்டாம் தொழிற்சாலை வளாகத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு ரயில் சென்னை வந்தடைந்தது.
“இந்த ரயிலின் சோதனை ஓட்டம் விரைவில் பூந்தமல்லியில் மேற்கொள்ளப்படும்,” என்றார்.
“ஏற்கெனவே, ‘அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா’ நிறுவனம், இந்த ரயிலின் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்து உள்ளது. இங்கும் பல்வேறு சோதனைகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
“அதன்பிறகு, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பல்வேறு சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும். பின்னர், சட்டப்பூர்வ ஒப்புதலுக்கு பிறகு, வழக்கமான சேவையை புதிய ரயில் தொடங்கும்,” என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் இடையே 4வது வழித்தடம் அமைகிறது. இதில் பூந்தமல்லி - கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை உயர்மட்ட பாதை அமைக்கப்படுகிறது.
இங்கு பூந்தமல்லி - போரூர் இடையே அடுத்த ஆண்டு நவம்பரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தடத்தில்தான் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் முதன்முதலாக இயக்கப்பட உள்ளது.