‘கிராண்ட் செஸ் டூர்’ வென்ற முதல் இந்தியர்; வரலாற்றுச் சாதனை புரிந்த பிரக்ஞானந்தா

‘கிராண்ட் செஸ் டூர்’ வென்ற முதல் இந்தியர்; வரலாற்றுச் சாதனை புரிந்த பிரக்ஞானந்தா

1 mins read
cfdfe623-603d-439b-922b-26c2587a2eea
 2026ஆம் ஆண்டுக்கான ‘கிராண்ட் செஸ் டூர்’ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா. - படம்: செஸ்பேஸ் இந்தியா/எக்ஸ்தளம்
Google News Preferred Icon

அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான புக்ழ்பெற்ற 'கிராண்ட் செஸ் டூர்' இறுதிப் போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அப்பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.

இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

போட்டியின் தொடக்கத்தில் கருவானாவைவிட ஆறு புள்ளிகள் பின்தங்கியிருந்த போதிலும், மன உறுதியுடன் விளையாடிய அவர், மிகக் குறைந்த நேரக் கட்டுப்பாட்டுடன் விளையாடப்படும் ரேபிட் போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி வித்தியாசத்தைச் சமன் செய்தார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நான்கு மின் வல்லாட்டம் (பிளிட்ஸ்) சுற்றுகளிலும் திறம்படச் செயல்பட்டு வெற்றியைத் தன் வசமாக்கினார்.

இம்மாபெரும் வெற்றிக்கு பரிசாக அவருக்கு $200,000 அமெரிக்க டாலர் (சுமார் 254, 095 சிங்கப்பூர் வெள்ளி) பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

பிரக்ஞானந்தாவின் வரலாற்றுச் சாதனையைப் பாராட்டித் தமிழக முதல்வர் விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டியில் அபாரமான மன உறுதியுடனும் மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றிருப்பது பிரக்ஞானந்தாவின் அசாதாரண ஆற்றலுக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்; இது இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
பிரக்ஞானந்தாஅமெரிக்காசதுரங்கம்