புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும் எதிராக 196 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
தொடர்ந்து அந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்து, முடிவெடுக்க கூட்டு நாடாளுமன்றக் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது.
அந்தக் குழுவில் 27 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 39 பேர் இடம்பெற்று உள்ளனர்.
அந்தக் குழுவின் முதல் ஆய்வுக் கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றக் கூட்டுக் குழு என்பது குறிப்பிடத்தக்க மசோதா ஒன்றில் எதிர்ப்போ சந்தேகமோ எழுந்தால் அமைக்கப்படும்.
அந்தக் குழுவில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பர்.
அரசின் எந்தத் தூண்டுதல்களும் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு அந்தக் குழு அறிக்கையைத் தயார் செய்யும்.