கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்று இயந்திர யானையை சடங்குகள் செய்ய அறிமுகப்படுத்தியுள்ளது. இரிஞ்ஞாடப்பிள்ளி ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் சடங்குகள் செய்ய இயந்திர யானை ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த யானையை மலையாள நடிகை பார்வதி திருவோடு ஆதரவுடன் 'பீட்டா' (PETA) இந்திய நிறுவனம் கோயிலுக்கு பரிசாக வழங்கியுள்ளது.
இந்த இயந்திர யானைக்கு இரிஞ்ஞாடப்பிள்ளி ராமன் என்று பெயரிடப்பட்டுள்ளது. உயிருள்ள யானைகள் போன்று ராமனின் உயரம் பத்து அடி உயரம். இதன் எடை 800 கிலோகிராம். யானையில் நான்கு பேர் ஏறி பயணம் செய்யலாம். யானையின் தலை, கண், வாய், காது, வால் ஆகிய அனைத்தும் மின்சாரத்தில் இயங்குகின்றன.
யானைகள் அல்லது மற்ற விலங்குகளை சடங்குகள், பண்டிகைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று கோயில் நிர்வாகம் அண்மையில் முடிவெடுத்தது. அதனைத் தொடர்ந்து, பீட்டா இந்தியா நிறுவனம் இயந்திர யானையை கோயிலுக்கு பரிசளித்தது.
கேரளாவில் 15 ஆண்டுகளில் மதம் பிடித்த யானைகள் 526 பேரைக் கொன்றுள்ளன.
கேரளா கோயில் விழாக்களில் யானைகளுக்கு சிறப்பிடம் உண்டு. இருப்பினும் யானைகளின் நலனைக் கருதி மற்ற கேரளா கோயில்களும் இயந்திர யானைகளைப் பயன்படுத்தும் என இரிஞ்ஞாடப்பிள்ளி ஸ்ரீ கிருஷ்ணா கோவில் நிர்வாகம் நம்புகிறது.


