அமராவதி: தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் புதிய தங்கச் சுரங்கம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி பகுதியில் உள்ள இந்தச் சுரங்கம், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் தொடங்கப்படும் முதல் தனியார் தங்கச் சுரங்கம் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெறுகிறது.
ஏறக்குறைய 600 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
டெக்கான் கோல்ட் மைன்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்தச் சுரங்கம், அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1,000 கிலோ தங்கம் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இப்பகுதியில் கிட்டத்தட்ட 42,500 கிலோ வரை தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுரங்கத்தில் தங்கம் எடுப்பதற்கான தொடக்கநிலைச் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
முழுமையான உற்பத்தி தொடங்கியதும், முதல் கட்டமாக ஏறக்குறைய 750 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திறந்த வெளிச் சுரங்கமான இங்கு, நிலத்தின் மேற்புறத்திலிருந்து குழிதோண்டி தங்கம் எடுக்கப்படும். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பாறைகளைப் பொடியாக்கி தங்கம் பிரித்தெடுக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம், இந்த ஆண்டு மே மாதத்திற்குள் முழுமையான வணிக உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பொருளியல் தாக்கம், வேலைவாய்ப்பு
டெக்கான் கோல்ட் மைன்ஸ் நிறுவனத்தின் ஜொன்னகிரி திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையடுத்து அதன் பங்கு 24% அதிகரித்துள்ளது
ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தின் பிஸ்மத்தம், ராமகிரி போன்ற இடங்களிலும் தங்கம் இருப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியா ஆண்டுதோறும் ஏறக்குறைய 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்து வரும் நிலையில், உள்நாட்டிலேயே தங்கம் உற்பத்தி செய்யப்படுவது இறக்குமதி தேவையைக் குறைப்பதோடு பொருளியல் வலிமையையும் அதிகரிக்கும்.
இத்திட்டத்தின் மூலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குகளும் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இச்சுரங்கம் இந்தியாவின் தங்க உற்பத்தியில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

