பாட்னா: பீகார் மாநிலத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார். இதற்கு முன்பு அவர் துணை முதல்வராகப் பொறுப்பில் இருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
அம்மாநில முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். அவர் பத்தாவது முறையாக முதல்வராகத் தேர்வான நிலையில், திடீர் திருப்பமாக நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தேர்வானார். இதையடுத்து கடந்த மாதம் தனது முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
இதையடுத்து பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் பீகாரில் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை முதல்வராகப் பொறுப்பில் இருந்த சாம்ராட் சவுத்ரி சட்டமன்ற பாஜக குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்வானார். அவருக்கு நிதிஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து புதன்கிழமை (ஏப்ரல் 15) புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றுக் கொண்டார்.
பீகார் மாநிலத்தில் முதன்முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.
முன்னதாக நிதிஷ்குமாரின் பதவி விலகலை அடுத்து, அம்மாநில ஆளுநர் சையத் அடா ஹஸ்னைனைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சாம்ராட் சவுத்ரி.

