தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவிலேயே முதன்முறையாகக் காகிதமில்லா வாக்களிப்பு முறை

1 mins read
9769ccb2-4cb5-4fb6-aa70-752ecb572d13
காகிதமற்ற வாக்களிப்பு நடைமுறைக்கு வரும்போது அனைத்து நடவடிக்கைகளும் மின்னிலக்கமயமாக்கப்படும் என்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். - சித்திரிப்புப் படம்: ஊடகம்

போபால்: இந்தியாவிலேயே முதன்முறையாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் காகிதமில்லா வாக்களிப்பு முறை செயல்படுத்தப்பட்டது.

அங்கு நடைபெற்ற கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் வாக்காளர்கள்துளியும் காகிதப் பயன்பாடு இல்லாமல் வாக்களித்தனர்.

மத்தியப் பிரதேச மாநில தேர்தல் ஆணையம் இந்த வாக்களிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. போபால் மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி இடைத்தேர்தலில் காகிதமில்லா வாக்களிப்பு முறையின்கீழ் 84 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது என்றும் இது நாட்டில் முதன் முறையாக காகிதமற்ற வாக்களிப்பு முறையில் நடைபெற்ற தேர்தல் என்றும் ஊடகச்செய்திகள் தெரிவித்தன.

பஞ்சாயத்து, நகர அமைப்புகளுக்கான தேர்தல்களை எளிதாகவும் சுமுகமாகவும் வெளிப்படையாகவும் நடத்த காகிதமற்ற தேர்தல் முறை குறித்து தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.

“பஞ்சாயத்து தேர்தல்களில் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பு 26 விதமான படிவங்களை நிரப்ப வேண்டியுள்ளது. காகிதமற்ற வாக்களிப்பு நடைமுறைக்கு வரும்போது இந்த நடவடிக்கையானது மின்னிலக்கமயமாக்கப்படும்.

“மத்தியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேர்தல் வெறும் சோதனை முயற்சிதான். அது 84 விழுக்காடு வாக்குப்பதிவுடன் வெற்றி பெற்றுள்ளது,” என மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் அபிஷேக் சிங் தெரிவித்தார்.

இத்தேர்தலில் வாக்காளர்களின் கையெழுத்து, பெருவிரல் ரேகை ஆகியவை மின்னலக்க முறையில் பதிவு செய்யப்பட்டு அவர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், பதிவான வாக்கு விழுக்காடும், வாக்குச்சீட்டுக் கணக்கீடும் இணையம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்