காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் அனைத்து மகளிர் காவலர் குழு முதன்முறையாக என்கவுன்டரை நடத்தி, தேடப்படும் குற்றவாளியைக் கைது செய்தது.
வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகளை எதிர்நோக்கி வரும் 22 வயது ஜிதேந்திராவை திங்கட்கிழமை (செப்டம்பர் 22) இரவு, சோதனைச் சாவடியில் நிற்கும்படி சொன்னதாக மூத்த காவல்துறை அதிகாரி உபாசனா பாண்டே தெரிவித்தார்.
எனினும், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜிதேந்திரா தனது வாகனத்தை நிறுத்தாமல் தப்பிக்க முயன்றதை அடுத்து, இந்த என்கவுன்டர் சம்பவம் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்து ஜிதேந்திரா கீழே விழுந்தார்.
கையை மேலே தூக்கி சரணடைந்து விடும்படி மகளிர் காவலர் குழுவினர் சொன்னபோது, அவர் காவலர்களை நோக்கிச் சுட்டார். பின்னர், அவர்களின் பதிலடித் தாக்குதலில் காயமடைந்த ஜிதேந்திரா கைது செய்யப்பட்டதாக திருமதி பாண்டே மேலும் கூறினார்.
விசாரணையின்போது, டெல்லி-என்சிஆர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களான பைக்குகள், ஸ்கூட்டர்களைத் திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும், அவர் தொலைபேசிகள் மற்றும் பிற பொருள்களையும் களவாடி வந்ததாகக் கூறினார்.
பெண் காவலர்கள் அவரது கைத்துப்பாக்கியையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து ஒரு கைப்பேசி, டேப்லெட்டையும் மீட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை கைப்பேசி, டேப்லெட்டைத் திருடியதாகவும் அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் கடந்த ஆண்டு டெல்லியில் இருந்து திருடப்பட்டதாகவும் ஜிதேந்திரா வாக்குமூலத்தில் கூறினார்.