வரலாற்றில் முதல்முறை: தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க 193 எம்.பி.க்கள் மனு

வரலாற்றில் முதல்முறை: தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க 193 எம்.பி.க்கள் மனு

2 mins read
7ae085a8-4341-46d3-9777-13b13a9db94c
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார். - கோப்புப் படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் மனு அளிப்பதற்கான முயற்சியில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

அந்த மனுவில் 130 மக்களவை உறுப்பினர்களும் 63 மாநிலங்களவை உறுப்பினர்களும் இதுவரை கையெழுத்திட்டுள்ளதாக அதுபற்றி அறிந்தவர்கள் வியாழக்கிழமை (மார்ச் 12) கூறினர்.

தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்க தீர்மானம் இயற்றக் கோரும் மனுவில் குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்களும் 50 மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டு இருக்க வேண்டும் என்பது விதி.

ஆயினும், அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த மனு வெள்ளிக்கிழமை (மார்ச்13) மக்களவை அல்லது மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரை பதவியில் இருந்து நீக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மனு அளிக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை.

போதுமான எண்ணிக்கை எட்டப்பட்டபோதிலும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மனுவில் கையெழுத்திட்டதாக எதிர்க்கட்சி ஒன்றின் தலைவர் ஊடகங்களிடம் கூறினார்.

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஆம் ஆத்மி போன்ற கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாரபட்சமான நடவடிக்கை, தேர்தல் மோசடி மீதான விசாரணையை வேண்டுமென்றே தடுத்தல், பெருவாரியான வாக்குரிமை பறிப்பில் ஈடுபட்டது என்பன உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பல சந்தர்ப்பங்களில் ஆளும் பாஜகவுக்கு உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

நாடாளுமன்ற அவையின் மொத்த உறுப்பினர்களில் சிறப்புப் பெரும்பான்மை அல்லது மன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களித்தவர்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான், பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

குறிப்புச் சொற்கள்