புதுடெல்லி: இந்திய குடியரசு தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெற உள்ள அணிவகுப்பில் முதன்முறையாக இந்திய ராணுவத்தின் கால்நடைப் பிரிவு பங்கேற்க உள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அணி வகுப்பில் முப்படைகளின் வீரர்கள் பங்கேற்பர். மேலும் மத்திய ஆயுதப்படைகள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதும் வழக்கம்.
இந்நிலையில் வரும் 26ஆம் தேதியன்று நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் மறுசீரமைப்பு, கால்நடைப் பிரிவைச் சேர்ந்த ஒட்டகங்கள், குதிரைகள், பறவைகள், மோப்ப நாய்கள் ஆகியவையும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை இரண்டு பாக்ட்ரியம் ஓட்டகங்கள், நான்கு ஜான்ஸ்டர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், 10 இந்திய இன ராணுவ நாய்கள், ஏற்கெனவே ராணுவ சேவையில் உள்ள ஆறு மோப்ப நாய்கள் ஆகியவை அணிவகுப்பில் பங்கேற்க உள்ளன.
தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் அணிவகுப்பு ஒத்திகையை நாள்தோறும் ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

