புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கும் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் இளவரசர் ஷேக் காலிட் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அவர் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதன் முடிவில் அணுசக்தி, இயற்கை எரிவாயு, உணவுப்பூங்கா மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஐந்து முக்கியமான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன என்று இந்திய அதிகாரிகள் கூறினர்.
திங்கள்கிழமை அன்று ஐக்கிய அரபு சிற்றரசுகளின் நியூக்ளியர் எனர்ஜி, இந்திய அணு சக்தி கழகம் ஆகியவற்றுக்கு இடையே அணுமின் நிலைய செயல்பாடுகள் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்தியாவில் உணவுப்பூங்கா மேம்பாடு தொடர்பாக அபுதாபி நிறுவனம், குஜராத் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இருதரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய தொழில் வர்த்தக அமைச்சர், திரு.பியூஷ் கோயல், பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்தீப் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இளவரசர் ஷேக் காலிட், இந்திய அதிபர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அதிபர் திரௌபதி முர்மு, ஐக்கிய அரசு சிற்றரசுகளின் மூன்றாம் தலைமுறை, தலைமையை இந்திய அதிபர் மாளிகைக்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இரு நாடுகளின் தொலைநோக்குப் பார்வையால் இருதரப்பு உறவுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அடைந்துள்ளது என்றும் புதிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தியதில் மிகுந்த மனநிறைவு கொள்வதாகவும் அதிபர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தின்போது அந்நாட்டுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், அண்மைக்காலமாக ஐக்கிய அரபு சிற்றரசுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலைமதிப்பற்ற உலோகங்கள் வெகுவாக அதிகரித்துவிட்டது தொடர்பில் இந்திய தொழில்துறையினர் சில புகார்களை எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியான சூழலில், இரு நாள் அதிகாரபூர்வப் பயணமாக இந்தியா சென்றுள்ளார் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் இளவரசர் ஷேக் காலிட்.