இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே ஐந்து முக்கியமான ஒப்பந்தங்கள்

இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே ஐந்து முக்கியமான ஒப்பந்தங்கள்

படம்: அமருஜாலா

06 Oct 2026 - 3:49 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர் கய் பார்மலின், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இருநாட்டுத் தலைவர்களும் நடத்திய உயர்நிலைப் பேச்சுவார்த்தையின் முடிவில், வர்த்தகம், முதலீடு, குடியேற்றக்கொள்கை, போக்குவரத்து உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கியமான துறைகளில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா, சுவிட்சர்லாந்து இடையேயான உறவில் இதுவொரு புதிய பொன்னான அத்தியாயம் என்றார்.

வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு சுவிஸ் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் இதன்மூலம் இந்தியாவில் பத்து லட்சம் புதிய நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் திரு மோடி தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் வேளாண் பொருள்கள், மருந்துகள், ஜவுளி, பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதிக்குச் சுவிஸ் சந்தை விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தங்களின்படி, இளம் வல்லுநர்கள் பரிமாற்றத் திட்டத்தின்மூலம் ஆண்டுதோறும் 300 இந்திய இளையர்களுக்குச் சுவிட்சர்லாந்தில் தங்கிப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை அந்நாட்டிற்குள் பலமுறை நுழையும் விசா வசதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அணுசக்தி, பாதுகாப்பு உற்பத்தி, விண்வெளி ஆராய்ச்சி, தூய்மை ஆற்றல் உள்ளிட்ட துறைகளிலும் கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சுவிஸ் அதிபர் கய் பார்மலின் பேசுகையில், வேகமாக வளர்ந்துவரும் உலகளாவிய பொருளியல் அமைப்பில் இந்தியா ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது என்றார்.

புதுடெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்ச நிலை மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஏஐ மாநாட்டில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உக்ரேன், மத்திய கிழக்கு மோதல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் அரசதந்திரக் கொள்கைக்கு சுவிஸ் அதிபர் முழு ஆதரவு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சுவிட்சர்லாந்துஒப்பந்தம்விண்வெளிபிரதமர்நரேந்திர மோடிபேச்சுவார்த்தைவிசாஅணுசக்திஆராய்ச்சி