புதுடெல்லி: இந்திய விமான நிலையங்களில் நடைபெறும் சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதில் ஒரே தாய்க்குப் பிறந்த ஐந்து லேப்ரடார் மோப்ப நாய்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
பஞ்சாபின் அட்டாரி எல்லைக்கு அருகே டிசம்பர் 2020ல் ‘கோகோ’ என்ற சுங்கத்துறை மோப்ப நாய்க்குப் பிறந்தவை இந்த ஐந்து குட்டிகளும்.
இவை சசாஸ்திர சீமா பல் மையத்திற்குக் கொண்டு வரப்பட்டு அட்டாரி-வாகா சுங்கத்துறை K9 பயிற்சி மையத்தில் தீவிர சிறப்புப் பயிற்சி பெற்றன.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த இந்த ஐந்து நாய்களும் நாட்டின் பல்வேறு முக்கிய சுங்க மண்டலங்களில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
ஓவி, ஆர்லி ஆகிய இரண்டும் பெண் நாய்கள்; ஓரா, ஓப்பல், ஓரியோ ஆகியவை ஆண் நாய்கள்.
ஓவி புனே சுங்கத்துறையிலும் மற்றவை திருச்சி, சென்னை, புதுடெல்லி அனைத்துலக விமான நிலையங்களிலும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பயிற்சியில் முதலிடம் பிடித்த ‘ஓவி’, அண்மையில் பேங்காக்கில் இருந்து வந்த பயணி ஒருவரின் பெட்டியை மோப்பமிட்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.
வெற்றிடத்தை சீல் செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான 3.028 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெவ்வேறு நகரங்களில் பணியாற்றினாலும், புத்துணர்வுப் பயிற்சிகளின் போது மீண்டும் சந்தித்துக் கொள்ளும் இந்த ஐந்து சகோதர நாய்களும் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன.
