தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து மில்லியன் இந்தியர்களிடம் அமெரிக்க விசா

1 mins read
e95a213f-3f2c-425e-9b6d-12c57acbf095
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து விரைவில் விடைபெறவிருக்கும் எரிக் கர்செட்டி. - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: இப்போதைக்கு ஐந்து மில்லியன் இந்தியர்கள் அமெரிக்க விசா வைத்துள்ளனர் என்று இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து விரைவில் விடைபெறவிருக்கும் எரிக் கர்செட்டி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தாம் தூதர் பொறுப்பை ஏற்ற பிறகு இந்தியர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவது 60 விழுக்காட்டிற்கும் மேல் உயர்வு கண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, குடியேற்ற உரிமையற்ற ஒரு மில்லியன் விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் திரு எரிக் கூறினார்.

அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதாவது, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியராக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தாம் இந்தியாவில் பணியாற்றிய காலகட்டத்தில், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுப்பட்டது குறித்துப் பெருமைகொள்வதாகத் திரு எரிக் கூறினார்.

இம்மாதம் 20ஆம் தேதி டோனல்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவின் குடிநுழைவுக் கொள்கையில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தேர்ச்சிமிக்க வெளிநாட்டு ஊழியர்களுக்கான எச்1பி விசா திட்டம் குறித்து கவலை எழுந்துள்ளது. ஏனெனில், அவ்விசா வைத்துள்ளோரில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள்.

இச்சூழலில், டெல்லியிலுள்ள ஃபுல்பிரைட் இல்லத்தில் இருநாட்டு உறவுகள் குறித்து திரு எரிக் உரையாற்றினார்.

இந்தியா - அமெரிக்கா இடையே பொருளியல், கல்விப் பரிமாற்ற உறவுகளை அதிகரிப்பது இரு நாடுகளையும் வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்