லடாக்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.
இந்த நிலையில் லடாக் மாவட்டங்களில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜான்ஸ்கர், த்ராஸ், ஷாம், நும்பரா, சாங்தாங் ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படும்.
வளர்ச்சியடைந்த மற்றும் வளமான லடாக்கைக் கட்டமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசமாக இருப்பதால் லடாக் மத்திய உள்துறை அமைச்சின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் தற்போது லே, கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டும் உள்ளன. தற்போது ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், இனிமேல் லடாக் ஏழு மாவட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.

