மொகடிஷு: சோமாலியக் கடற்பகுதியில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் உட்பட ஐந்து கப்பல் ஊழியர்களை சோமாலியக் கடற்கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றனர்.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தன்னாட்சிபெற்ற மண்டலமான புண்ட்லாண்ட் பகுதியின் கடலோரக் காவற்படை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஏப்ரலில் சோமாலியத் தலைநகர் மொகடிஷுவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த `எம்டி ஹானர் 25’ என்ற எண்ணெய் சுத்திகரிப்புக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியதாகத் தெரிவித்தது. அக்கப்பலில் 18,500 பீப்பாய் எரிபொருளுடன் 17 ஊழியர்கள் இருந்தனர்.
இந்நிலையில், தரின்-பார் பகுதியில் சுற்றுக்காவல் படையினர் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போது, கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் சரணடைய முன்வந்தனர்.
இருப்பினும், அவர்கள் கப்பலில் இருந்த ஐந்து ஊழியர்களை ஏற்கெனவே சுட்டுக்கொன்றுவிட்டது தெரியவந்தது. அவர்களில் ஓர் இந்தியர், மூன்று பாகிஸ்தானியர்கள், மியான்மாரைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர். எஞ்சிய 12 பேரில் 10 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
`எம்டி ஹானர் 25’ கப்பல், பாதுகாப்புப் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இப்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 16 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய எஞ்சிய கொள்ளையர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
டோகோ நாட்டுக் கொடியுடன் செங்கடலில் பயணம் செய்த ‘எம்டி யூரேகா’ என்ற மற்றொரு எரிபொருள் கப்பலையும் அதிலிருந்த 12 ஊழியர்களையும் சோமாலியக் கொள்ளையர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) விடுவித்தனர். மீட்கப்பட்ட 12 பேரான எட்டு எகிப்தியர்களும் நான்கு இந்தியர்களும் இப்போது உள்ளூர் மக்களின் பராமரிப்பில் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
