ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள தாயிஃப்-ரானியா நெடுஞ்சாலையில் நேர்ந்த சாலை விபத்தில் இந்தியத் தாதியர் நால்வர் உட்பட ஐவர் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) ரானியாவிலிருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற சவூதி நாட்டவரும் உயிரிழந்தார்.
மாண்டவர்களில் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி ஜெகதீஷ், 37, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஹெப்சிபா தேவமணி, 33, என்ற இருவரும் அடங்குவர். ஜெய்சிமோல் மேத்யூ. 36, ஜொபினா ஜானி, 26, என்ற மற்ற இருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் நால்வரும் தாயிஃப் ஆளுநரகத்தில் உள்ள அல் கஃபா, அல் ஓவைலா முதன்மைச் சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வந்தனர்.
தங்களது விடுமுறை நாளில் அருகில் உள்ள நகரத்திற்குப் பொருள்கள் வாங்கச் சென்றபோது இவ்விபத்து நேர்ந்தது.
உயிரிழந்தோரின் உடல்கள் தற்போது ரானியா பொது மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களது உடல்களைச் சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகளும் சமூக அமைப்புகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
