டாங்: குஜராத் மாநிலத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
டாங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் நிகழ்ந்தது.
குஜராத் மாநிலம் துவாரகா பகுதியில் இருந்து சனிக்கிழமை இரவு பேருந்தில் புறப்பட்ட பக்தர்கள், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து 2.5 கிலோ மீட்டருக்கு முன்பு பேருந்தை நிறுத்தி அனைவரும் தேநீர் அருந்தினர். பேருந்து மீண்டும் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து நிகழ்ந்தது.
சபுதாரா மலையின் மீது பேருந்து சென்றுகொண்டு இருந்தபோது அதன் ஓட்டுநர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததால் அந்தப் பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்ததாக அந்த வட்டார காவல்துறைக் கண்காணிப்பாளர் எஸ்ஜி பட்டீல் செய்தியாளர்களிடம் கூறினார்.
சாலைத் தடுப்பை உடைத்துக்கொண்டு 35 அடி ஆழத்தில் அது உருண்டு விழுந்து சேதமடைந்ததாகவும் அப்போது அந்தப் பேருந்தில் 48 பக்தர்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“சம்பவ இடத்திலேயே ஐவர் மாண்டனர். அவர்களில் இருவர் பெண்கள். 17 பேர் படுகாயங்களுடன் அஹ்வா என்னும் இடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“மேலும் 18 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன,” என்று அதிகாரிகள் கூறினர்.

