ஐந்து மடங்கு சம்பளம்; வெளிநாடுகளுக்குப் பறக்கும் இந்தியத் தாதியர்

2 mins read
5f19189c-5d4a-419a-b74b-23c58e1f4af9
இந்தியாவிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை தாதியர்க்கு மாத ஊதியமாகத் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியத் தாதியர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.

உலகளவில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குப் பற்றாக்குறை நிலவும் வேளையில், நல்ல சம்பளம், மேம்பட்ட வேலைச்சூழல் போன்ற காரணங்களுக்காக இந்தியத் தாதியர் வெளிநாடு செல்வதாகச் சொல்லப்படுகிறது.

நல்ல சம்பளம், சலுகைகளை வழங்கி, ஜெர்மனி, அயர்லாந்து, மால்டா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பெல்ஜியம் போன்ற நாடுகள் இந்தியத் தாதியரை ஈர்க்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

எடுத்துக்காட்டாக, ஜெர்மனிக்குச் செல்லும் இந்தியத் தாதி ஒருவர் தொடக்கநிலை மாத ஊதியமாகக் கிட்டத்தட்ட 260,000 ரூபாயை (S$3,835) எதிர்பார்க்கலாம் என்று ‘பார்டர்பிளஸ்’ எனும் ஊழியரணி இடம்பெயர்வுத் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. பதிவுபெற்ற தாதிக்கான உரிமம் பெற்றபின் அது ரூ.320,000 வரை உயரலாம்.

இந்தியாவிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை தாதியர்க்கு மாத ஊதியமாகத் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், பல வேலைவாய்ப்பு முகவைகளும் இந்தியத் தாதியர் வெளிநாடுகளில் வேலைபெற உதவுகின்றன. குறிப்பாக, தீவிர சிகிச்சை, முதியோர் மருத்துவம், கர்ப்பகாலச் சேவைகள் போன்ற துறைகளில் இந்தியத் தாதியர்க்கான தேவை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியத் தாதியரை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கில், பல்வேறு நாடுகளும் மொழித் தேர்ச்சி, உரிமத் தேர்வுகள் போன்ற நுழைவு விதிகளைத் தளர்த்தியுள்ளன.

இவ்வாறு தாதியர் வெளிநாடுகளை நோக்கிச் செல்வது இந்தியச் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்போதைக்கு இந்தியாவில் 1,000 பேருக்கு 1.96 பேர் எனும் விகிதத்தில் தாதியர் உள்ளனர். ஆனால், உலகச் சுகாதார நிறுவனம் 1,000 பேருக்கு மூன்று தாதியர் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

இத்தகைய சூழலில் தாதியரைத் தக்கவைக்க உள்நாட்டில் வேலைச் சூழலை மேம்படுத்துவதும் நல்ல சம்பளம் வழங்குவதும் பயிற்சி வசதிகளை விரிவுபடுத்துவதும் அவசியம் என்று வல்லுநர்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவில் 3.3 மில்லியன் பதிவுபெற்ற தாதியர் உள்ளனர் என்றும் ஆனால், 1.4 பில்லியன் மக்கள்தொகையைப் பார்க்கும்போது இது குறைந்த அளவுதான் என்றும் இந்தியச் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் கிரிதார் கியானி கடந்த வாரம் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்