ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிறிது நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தது.
அந்த ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானம், சனிக்கிழமை (ஜூலை 19) காலை 6.40 மணியளவில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
தாய்லாந்து உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு புக்கெட் நகரில் அந்த விமானம் தரையிறங்க வேண்டியது.
ஆனால், விண்னை நோக்கிச் சென்ற விமானம் 16 நிமிடங்கள் பறந்த பின்னர் ஹைதராபாத் விமான நிலையத்திற்கே திரும்பி வந்து அவசரமாகத் தரையிறங்கியது.
அதற்கான காரணத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமோ ஹைதராபாத் விமான நிலையமோ தெரிவிக்கவில்லை.
ஊடகங்கள் அந்தத் தகவலுக்காகக் காத்திருந்தன.
விமானம் திரும்பி வந்ததால் பயணிகள் கவலை அடைந்தனர். அவர்களிடம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
இந்த வாரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் நிகழ்ந்திருக்கும் இரண்டாவது சம்பவம் இது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த புதன்கிழமை லக்னோ நகரில் இருந்து துபாய் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 193 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டு, 155 விமானப் பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டனர்.

