தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

2 mins read
8623c647-045c-45c9-96f5-5b476b11329f
தமக்கு செயற்கை உயிர்வாயு கருவியின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் அதனால் தம்மால் எதுவும் பேச முடிவில்லை என்றும் விமானப் பணிப்பெண் தமது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

குருகிராம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக விமானப் பணிப்பெண் ஒருவர் புகார் எழுப்பியுள்ளார்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வரும் அவர், அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விமானப் பணிப்பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் அவர், அண்மையில் பணி சார்ந்த நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மூழ்கிப் போனார். அவரை மீட்ட கணவர், உடனடியாக அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், சிகிச்சையின்போது அவர் தனக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்ததாக கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் காவல்துறையில் புகார் அளித்தனர்.

விமானப் பணிப்பெண் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடும் சம்பவம் மறுநாள் நடந்தது என்று தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை செய்தித்தொடர்பாளர் கூறினார்.

தமக்கு செயற்கை உயிர்வாயு கருவியின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் அதனால் தன்னால் எதுவும் பேச முடிவில்லை என்றும் விமானப் பணிப்பெண் தமது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

“அப்போது நான் லேசான மயக்கத்தில் இருந்தேன். அந்தச் சம்பவத்தின்போது தன்னைச் சுற்றி தாதியரும் இருந்தனர். ஆனால் அருகே நின்றிருந்த நபர் என்னிடம் அத்துமீறியபோது அவ்விரு தாதியரும் அவரைத் தடுக்காமல் இருந்தனர்,” என்று அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளி அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ள காவல்துறை, மருத்துவமனையில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்