பெங்களூரு: விமானத்தில் ஏறுவதற்காக 54 பயணிகள் காத்திருந்த நிலையில், அவர்களை விட்டுவிட்டு விமானம் புறப்பட்டுச் சென்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (09-01-2023) காலை 'கோ ஃபர்ஸ்ட்' விமானம் மூலமாக டெல்லி செல்ல அப்பயணிகள் காத்திருந்தனர். காத்திருப்புக் கூடத்திலிருந்து பயணிகளை விமானத்திற்கு அழைத்துச் செல்ல மொத்தம் நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், மூன்று பேருந்துகளில் வந்த பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு காலை 6.40 மணியளவில் விமானம் கிளம்பிச் சென்றது. "நாங்கள் மூன்றாவது பேருந்தில் இருந்தோம். மற்ற மூன்று பேருந்துகளில் இருந்த பயணிகளும் விமானத்தில் ஏறிவிட்டனர். இன்னொரு பேருந்தில் சென்று, விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்ட என் நண்பர், விமானம் கிளம்பத் தயாராகவுள்ளதாகக் கூறினார். எங்களை விட்டுவிட்டு விமானம் புறப்படத் தயாராய் இருப்பதை தரையிலிருந்த பணியாளர்களிடம் கூறிச் சத்தமிட்டேன்," என்று சுமித் குமார் என்ற பயணி கூறியதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி தெரிவிக்கிறது. "இது கவனக்குறைவின் உச்சம்," என்று கொந்தளித்திருந்தார் ஷ்ரேயா சின்ஹா என்ற டுவிட்டர்வாசி. பெருந்தவறு நிகழ்ந்ததை உணர்ந்த விமான நிலைய அதிகாரிகள், ஆத்திரமடைந்த பயணிகளைச் சமாதானப்படுத்த முயன்றனர். பின்னர் காலை 10 மணியளவில் இன்னொரு விமானத்தில் அந்த 54 பயணிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது பயண உடைமைகள் அனைத்தும் முதல் விமானத்திலேயே சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் கோ ஃபர்ஸ்ட் ஏர்வேஸ் நிறுவனம் விளக்கம் அளிக்கும்படி இந்தியா விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
54 பயணிகளை விட்டுவிட்டுக் கிளம்பிச் சென்ற விமானம்
2 mins read
தவிக்க விடப்பட்ட 54 விமானப் பயணிகளும் பின்னர் இன்னொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். படம்: இன்ஸ்டகிராம்/கோ ஃபர்ஸ்ட் ஏர்வேஸ் -

