மும்பை: மும்பை நகரில் இருந்து தாய்லாந்தின் புக்கெட் நகருக்குப் பறந்து செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் திடீரென்று சென்னைக்குத் திசைதிருப்பப்பட்டது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, 6E 1089 என்னும் அந்த விமானம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தனது பயணத்தைத் தொடர இயலாமல் போனது.
அந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட இண்டிகோ நிறுவனம், சென்னையில் விமானம் முழுவதும் பாதுகாப்புச் சோதனை நடத்தப்படும் என்றும் அதன் பிறகு அது தனது பயணத்தைத் தொடரும் என்றும் கூறியது.
“பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் குறைக்க இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
“எங்களது விமானத்தில் பயணம் செய்வோர், விமானத்தில் பணிபுரிவோர் மற்றும் விமானத்தின் பாதுகாப்பே இன்றியமையாத அம்சம்,” என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டதாகவும் இண்டிகோவின் அறிக்கை குறிப்பிட்டது.
இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கையை அது தெரிவிக்கவில்லை.
ஒரே வாரத்தில் இண்டிகோ நிறுவனம் சந்தித்திருக்கும் இரண்டாவது சேவைத் தடங்கல் சம்பவம் இது.
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பர் 14ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானத்தில் பறக்கவில்லை. கோளாறு இருப்பதை விமானி முன்கூட்டியே கண்டறிந்ததன் காரணமாக ஒரு பெண் எம்.பி. உட்பட பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர்.