சென்னையில் மிதக்கும் உணவகம்

2 mins read
a43307fe-eeae-49b8-b9b1-a5fe6ef54834
முட்டுக்காட்டில் காலை 7.30 முதல் இரவு 11.00 மணி வரை மிதக்கும் உணவகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னையில் புதுமையாக மிதக்கும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு இது குதூகலத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவின் படகு இல்லங்களைப் போலவே சென்னை முட்டுக்காட்டில் இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பல் செவ்வாய்க்கிழமை முதல் (ஜனவரி 7) செயல்படத் தொடங்குகிறது.

சென்னையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த இடமாக இருந்து வருகிறது. விடுமுறைகள், வார இறுதி நாள்களில் கிழக்குச் சாலையில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள் மற்றும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூடி விடுகின்றனர்.

முட்டுக்காட்டில் ஏற்கெனவே தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதே இடத்தில் ரூ.5 கோடியில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பல் பயணம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலாப் பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“அனைத்துலகப் பயணிகள், உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வரை அனைவரையும் கவரும் வகையில், உணவுப் பட்டியலை வடிவமைத்துள்ளோம். விருந்தினர்கள் படகு இல்லத்திலிருந்து பழைய மகாபலிபுரம் சாலை (OMR) நோக்கி மூன்று கி.மீ. தூரத்துக்கு படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடையலாம்,” என்று மிதக்கும் கப்பல் உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் படகில் உயிர்காக்கும் அங்கி மற்றும் தீயணைப்புக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. காலை 7:30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை உணவகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்