டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள விஷ்ணுகாட் - பிப்பல்கோட்டி நீர்மின் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு வந்த சுரங்கப் பாதையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், அங்குப் பணியாற்றிய ஊழியர்களில் எழுவர் இடிபாடுகள், சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
சுரங்கப்பாதைக்குள் மொத்தம் 22 பேர் பணியாற்றிய நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அம்மாநில அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) தெரிவித்தனர்.
எஞ்சிய மூன்று ஊழியர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் சுரங்கத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் நீர்,இடிபாடுகளுக்கு இடையே போராடி எஞ்சிய தொழிலாளர்களைத் தேடி வருகின்றனர்.
சுரங்கத்திற்குள் மார்பளவுக்குத் தண்ணீர் தேங்கியிருந்ததைக் கண்ட மீட்புக் குழுவினர், நீருக்கடியில் செல்லக்கூடிய சிறப்புச் சாதனங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தினர்.
மீட்கப்பட்டவர்களில் 10 பேர் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த ஒரு ஊழியர் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் கவலை தெரிவித்துள்ள உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
விஷ்ணுகாட் - பிபால்கோட்டி நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையானது கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்தச் சுரங்கப்பாதையில் சுமார் 1.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
தற்போது தண்ணீரும் உள்ளே புகுந்ததால் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்கு வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


