அமராவதி: அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள பறக்கும் டாக்சிகளை நகரங்கள், பெருநகரங்களில் இயக்குவதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. இந்தப் பந்தயத்தில் சீனா போன்ற நாடுகள் மட்டுமே முன்னிலையில் உள்ள நிலையில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பறக்கும் டாக்சிகளைத் தயார்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று இந்திய, தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. குண்டூரைச் சேர்ந்த சாவா அபிராம், அமெரிக்காவில் இயந்திரவியல் பொறியியலில் (robotics engineering) முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இந்தியாவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் நோக்கம் கொண்டவர் இவர்.
போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் பறக்கும் டாக்சிகளை இயங்கச் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி, இவர் கவனமாக ஆய்வு செய்துவருகிறார். ஓட்டுநர் இல்லாமல் தரையிலிருந்து கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் வெற்றிகரமாக சோதனையிடப்பட்டுள்ளது.
ஆனால், ஓட்டுநரின்றி இத்தகைய வாகனங்களை இயக்க அனுமதி இல்லாததால் இரண்டிலிருந்து மூன்று இருக்கைகள் உள்ள பறக்கும் டாக்சியை சாவா அபிராம் தயாரித்தார். முழுவதுமாக உள்நாட்டுக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இரு இருக்கைகளைக் பறக்கும் டாக்சிக்கு வி2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது. இப்போது மூன்று இருக்கைகள் உள்ள பறக்கும் டாக்சியைத் தயாரிக்கும் பணியில் சாவா அபிராம் ஈடுபட்டுள்ளார்.