வடமாநிலங்களில் பனிமூட்டம்: சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து

1 mins read
14a8feaa-2c1e-4d68-bee8-398a3f2586aa
டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடுங்குளிரும் பனிமூட்டமும் நிலவி வருகின்றன. இதனால் கடந்த ஒரு வாரமாக விமானச் சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. - படம்: அவுட்லுக் இந்தியா

சென்னை: வட மாநிலங்களில் நிலவும் கடுங்குளிர், பனி மூட்டத்துடன் கூடிய மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் ரத்தான நிலையில், ஏராளமான விமானங்கள் தாமதமாகி உள்ளன.

சென்னையில் இருந்து டெல்லி, வாரணாசி பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களின் நான்கு விமானங்களும் டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய மூன்று விமானங்களும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் டெல்லி, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத் ஆகிய பகுதிகளுக்குச் சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏழு விமானங்கள் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாவதாக அறிவிக்கப்பட்டது.

டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடுங்குளிரும் பனிமூட்டமும் நிலவி வருகின்றன. இதனால் கடந்த ஒரு வாரமாக விமானச் சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்வோர் விமான நிலையங்களைத் தொடர்பு கொண்டு உரிய தகவல்களைப் பெற்று பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்