பீகாரை அடுத்து ஒடிசாவிலும் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

2 mins read
baa68984-be0b-46d3-9fca-ba0c519bb744
ஒடிசாவில் அடுத்த மாதம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் தொடங்கும் என்றார் திரு கோபாலான். - கோப்பு்பபடம்: ஊடகம்

புவனேஸ்வர்: பீகார் மாநிலத்தை அடுத்து, ஒடிசாவிலும் வாக்காளர் பட்டியலில், சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, 65 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் கொந்தளித்த எதிர்க்கட்சிகள், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தன.

வாக்குத் திருட்டு மூலம் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளது.

இத்தகைய சூழலில், பீகாரைத் தொடர்ந்து ஒடிசாவிலும் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒடிசா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோபாலன், 2024 சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுப்பியுள்ள பிஜு ஜனதாதளம் கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளது என்றார்.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அனைத்து விளக்கங்களையும் உரிய முறையில் அளித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். நியாயமான, வெளிப்படையான தேர்தல் நடைமுறைகள் மட்டும் செயல்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் குறைத்து மதிப்பிடும் வகையிலோ அல்லது பொதுமக்கள் அதன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைக்கவோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, ஒடிசாவில் அடுத்த மாதம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் தொடங்கும் என்றார் திரு கோபாலான்.

“வீடு வீடாகச் சென்று இந்தப் பணி மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,” என்றார் கோபாலன்.

ஒடிசாவில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்