உணவுப் பொருள்களில் கலப்படம்: 33 பேர் கைது, 27 நிறுவனங்களுக்கு சீல்

உணவுப் பொருள்களில் கலப்படம்: 33 பேர் கைது, 27 நிறுவனங்களுக்கு சீல்

படம்: நியூ கன்டின்யூவஸ் பீரோ

31 May 2026 - 4:33 pm

2 mins read

மும்பை: உணவுப் பொருள்களில் கலப்படம் செய்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 33 பேர் கைது செய்யப்பட்டு 27 நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

அம்மாநில உணவு, மருந்துத்துறை நிர்வாக அதிகாரிகள் பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததாக மாநில உணவு, மருந்து நிர்வாக ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்தார்.

அப்புகார்களின் பேரில் மும்பை, ஜல்கான், புனே, நாசிக் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஜல்கான் மாவட்டத்தில், பாலில் சமையல் எண்ணெய் கலந்து விற்கப்பட்டது தெரியவந்தது. இதேபோல் புனே மாவட்டத்தில் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்கவைக்க ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதும் அம்பலமானது.

பால்கர் மாவட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மும்பையின் தாராவி பகுதியில், விதிகளை மீறிய நுாடுல்ஸ் உற்பத்தி நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் திரு துக்காராம் முண்டே தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனையைத் தடுப்பது பாதுகாப்பற்ற உணவு உற்பத்தியைக் கண்டறிவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

சோதனை நடவடிக்கையின்போது 20.67 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருள்கள், கலப்பட உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 33 பேர் கைதான நிலையில், 27 நிறுவனங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
உணவுகலப்படம்மகாராஷ்டிராசோதனைகைது