மும்பை: இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில், சுகாதாரமற்ற உணவுக் கடைகள், உணவகங்களுக்கு எதிராக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே மேற்கொண்டு வரும் அதிரடிச் சோதனைகள் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன.
அவர் கடந்த மே மாதம் ஆணையராகப் பொறுப்பேற்றார். அப்போது தொடங்கி ஏறக்குறைய 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் அவரது குழுவினர் அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
அனைத்துலக முன்னணி நிறுவனங்களின் உணவகங்கள் முதல் உள்ளூர் சாலையோர உணவுக் கடைகள் வரை பல்வேறு இடங்களில் துக்காராம் ஐஏஎஸ் குழுவினர் நடத்திய சோதனைகளின்போது பல்வேறு உணவகங்களில் சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டதுடன், காலாவதியான பொருள்களைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த உணவகங்களின் உரிமங்கள் தற்காலிகமாகப் பறிக்கப்பட்டுள்ளன.
“மக்களின் உயிரோடு விளையாடும் நடவடிக்கைகளைச் சகித்துக்கொள்ள முடியாது,” என்று உறுதியாகக் கூறியுள்ளார் திரு துக்காராம் முண்டே.
நீதிமன்ற விமர்சனங்களுக்கும் சட்ட ரீதியான சவால்களுக்கும் அஞ்சாமல் அவர் தனது கடமையைச் செய்துவருவதாகப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
சட்டத்துக்கு இணங்க மறுப்பவர்கள், ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகளை விரைவில் எதிர்கொள்வார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரு முண்டே மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் மும்பையில் பல்வேறு மாற்றங்களைக் காண முடிகிறது என்றும் அண்மையில் அம்மாநகரச் சாலையோரக் கடைகள், பெரிய உணவகங்களுக்குச் சென்று பார்த்தபோது திரு முண்டேவின் சோதனை குறித்த அச்சம் வியாபாரிகளிடம் அதிகரித்திருப்பதைக் காண முடிந்ததாக ராய்ட்டர்ஸ் மேலும் கூறியுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக (ஐஏஎஸ்) தனது 21 ஆண்டு காலப் பணியில் பலமுறை இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும், நிர்வாக நடவடிக்கைக்குத் தாம் அஞ்சவில்லை என்றும் அவர் தொலைக்காட்சி நேர்காணல்களின்போது தெரிவித்துள்ளார்.


