கோல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சின்கீழ் செயல்படும் புதுடெல்லி காவல்துறை வங்காள மொழியை ‘பங்ளாதேஷிய மொழி’ எனக் குறிப்பிட்டிருந்தது.
புதுடெல்லி காவல்துறையில் அச்செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கோல்கத்தாவில் நடந்த காற்பந்து போட்டி ஒன்றில் ஈஸ்ட் பெங்கால் காற்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளைக் காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்தியாவை ஆளும் பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் அப்பதாகைகள் இருந்ததாகக் கூறப்பட்டது.
அதில், “நாங்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்காக தூக்கில் தொங்கினோம். தற்போது, எங்களது தாய்மொழியைப் பேசுவதால் ‘பங்களாதேஷியர்’என அழைக்கப்படுகிறோம்,” என எழுதப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது.
அதுதொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இதற்கிடையே, இந்தியாவின் நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்காள மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பு என தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுடெல்லி காவல்துறையினரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
“அவதூறான, அவமதிக்கும், தேச விரோதமான, அரசியலமைப்பிற்கு விரோதமான செயல்,” என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் தமது எதிரிப்பை கடிதம் மூலம் வெளிக்காட்டினார்.