உலகக் கிண்ணக் காற்பந்து: கேரளக் கல்வி நிலையங்களுக்கு திங்கட்கிழமை விடுமுறை

உலகக் கிண்ணக் காற்பந்து: கேரளக் கல்வி நிலையங்களுக்கு திங்கட்கிழமை விடுமுறை

1 mins read
f04c6465-88a2-4e1b-95c2-5d615fdb3072
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப்பின் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடக்கவிருந்தது. - படம்: ஏஎஃப்பி

திருவனந்தபுரம்: உலகக் கிண்ணக் காற்பந்து இறுதிப்போட்டியை முன்னிட்டு, இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் திங்கட்கிழமை (ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப்பின் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடக்கவிருந்தது. அப்போட்டியைக் கண்டு மகிழ விரும்பும் காற்பந்து ரசிகர்களான மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொதுக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் இவ்விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என அதிகாரத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுக் கல்வித்துறை அமைச்சர் என்.சம்சுதீன் தமது சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

“குழந்தைகளே, இப்போது மகிழ்ச்சிதானே?” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, போட்டி நள்ளிரவு தாண்டி நீடிக்கும் என்பதால் மாணவர்கள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்ல இயலாது என முன்னாள் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் விடுமுறை கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

விடுமுறையால் விடுபடும் வேலைநாளை ஈடுசெய்ய, பொதுவாக விடுமுறை நாளான ஒரு சனிக்கிழமையைப் பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம் என்றும் திரு சிவன்குட்டி பரிந்துரைத்தார்.

பொதுக் கல்வி அமைச்சர் சம்சுதீன், உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி எம் ஜான், விளையாட்டுத்துறை அமைச்சர் ஓ.ஜே.ஜனீஷ் உள்ளிட்ட பலரும் காற்பந்து ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
கேரளாகாற்பந்துஉலகக் கிண்ணம்விடுமுறை