புதுடெல்லி: 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ஜவுளித்துறை கிட்டத்தட்ட ரூ.29 லட்சம் கோடி வளர்ச்சியை எட்டும் என மத்திய ஜவுளி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்து வகையான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 11 விழுக்காடு வளர்ச்சி காண்கிறது என்றும் அவை கூறின.
மேலும், இது ஜவுளித்துறையின் விரிவாக்கத்திற்கும் சிறப்பான எதிர்காலத்திற்குமான அறிகுறி என்றும் அவை குறிப்பிட்டன.
அனைத்து பகுதிகளுடனும் இணைக்கப்பட்ட மதிப்புச் சங்கிலித் திறன், வலுவான மூலப்பொருள் அடித்தளம், விரிவான ஏற்றுமதி வழித்தடம், அதிகரித்துவரும் உள்நாட்டுச் சந்தை ஆகியவற்றுடன் ஜவுளித் துறையிலும் ஒரு பாரம்பரியமான நாடாக இந்தியா திகழ்கிறது.
அரசின் கொள்கைகளால் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம், தமிழகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அமைக்கப்படும் பிரதமரின் பிஎம் மித்ரா பூங்கா ஆகியவற்றின் மூலம் ரூ. 90,000 கோடி அதிகமாக முதலீடு கிட்டும் என முன்னுரைக்கப்படுகிறது.
மேலும், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் போன்ற திட்டங்கள், தொழில்நுட்ப ஜவுளி போன்ற வளர்ந்துவரும் துறைகள் ஆகியவற்றால் ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவை இந்தியா ஜவுளித் துறை ஏற்றுமதியில் முதன்மை நிலையை அடைய உதவும் எனக் கூறப்பட்டது.


