புதுடெல்லி: டெல்லிக் குண்டுவெடிப்புக்கு வெளிநாடுகளின் தூதரகங்களுடன் தூதர்களும் அனுதாபம் தெரிவித்துள்ளனர். செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே கார்க் குண்டு வெடித்ததில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர்.
இந்தியாவில் உள்ள எகிப்தியத் தூதரகம், வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. இக்கட்டான இந்த நேரத்தில் அவர்களை நினைத்து வழிபடுவதாக அது கூறியது. காயமுற்றவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக எகிப்தியத் தூதரகம் சொன்னது.
இந்தியாவுக்கான பிரான்சின் தூதர் தியெரி மத்தாவ், ஜப்பானியத் தூதர் ஓனோ கீச்சி, லித்துவேனியாவின் தூதர் டயானா மிக்கிவிச்செனே ஆகியோர், டெல்லிக் குண்டுவெடிப்பில் மாண்டோரின் அன்புக்குரியவர்களுக்கு ‘எக்ஸ்’ தளத்தில் அனுதாபம் தெரிவித்தனர். காயமுற்றோர் கூடிய விரைவில் மீண்டுவர வழிபடுவதாகவும் அவர்கள் கூறினர்.
இந்தியாவிற்கான பிரிட்டனின் உயர் ஆணையர் லிண்டி கேமரன், வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்துப்பார்ப்பதாகச் சொன்னார். சம்பவ இடத்திற்கு அருகில் இருப்போரை உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
உலகத் தலைவர்கள், அரசதந்திரிகளின் அனுதாபச் செய்திகள், இந்தியத் தலைநகரை உலுக்கிய வெடிப்புச் சம்பவம் குறித்த அனைத்துலகச் சமூகத்தின் அக்கறையைப் பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டது.
டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், மும்பை நகரங்களில் உயர் விழிப்புநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டம் நிறைந்த பொது இடங்களிலும் வழிபாட்டுத்தலங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

