புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் உயர் ரக வெளிநாட்டு மதுபானங்கள் வழங்கும் திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
எனினும், இந்தச் சேவைக்காக பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது. மாறாக, பயணக் கட்டணத்திலேயே இதற்காக குறிப்பிட்ட தொகை சேர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அனைத்துப் பயணிகளின் விருப்பத்துக்கேற்ப மதுபானங்கள் வழங்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ள நிலையில், முதல் வகுப்பு, வர்த்தக வகுப்பு, ‘எகானமி’ வகுப்பு என ஒவ்வொரு பிரிவுப் பயணிகளுக்கும் வழங்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் ரகங்கள் மாறுபடுவதாகக் கூறப்படுகிறது.
‘ஸ்காட்லாந்து 21’, ‘சிங்கிள் மால்ட்’ உட்பட இத்தாலியின் உயர் ரக மதுபானங்கள், சிறப்பு ‘வைன்’, ‘பீர்’ ஆகியவை வழங்கப்படுவதாக ஏர் இந்தியா செய்திக் குறிப்பில் தெரிவிக்கிறது.
எனினும், உள்நாட்டில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களில் மதுபானச் சேவை வழங்கப்பட மாட்டாது என்று நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது.
அகமதாபாத் விமான விபத்துக்குப் பின்னர் ஏர் இந்தியாவில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பயணிகளை ஈர்க்கும் வகையில் ஏர் இந்தியா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அண்மையில்கூட ஏர் இந்தியா விமானங்களில் பொடி இட்லி, தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகள் இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

